செவ்வாய், 26 மே, 2009


அகதிகளில்லை யாரும்

அவர்களிடம் சுமக்க முடியாத

துயரங்களிருக்கின்றன

வயல்களை , மரங்களை

பழகிய கடற்கரைகளை

நேசித்த பாதைகளை

கொண்டு வரவில்லை அவர்கள்



வெறுங்கையோடு நின்றவர்களை

நீர்ப்பறவைகள்

அழைத்து வந்திருக்கின்றன

நிரந்தரமாக அவர்களால்

இனி ஓய்வெடுக்க முடியாது

ராத்திரிகளை அகதிகள்

சாதரணமாக கடந்திட முடியாது



எப்போதும் அவர்களிடம்

விடுதலைப் பற்றிய பசியிருக்கும்

தன் நிலத்துக்கு திரும்பி செல்லும்

கனவிருக்கும்

யுத்தங்கள் வாழ்க்கையை

தின்ற கதைகளிருக்கும்

அவர்களின் தொடரும் கண்ணீர்

கடந்து வந்த

சித்ரவதைகளை சொல்லி கொண்டிருக்கும்

களத்திலிருந்து இனி திரும்பவே

முடியாதவர்களை பற்றிய செய்திகளிருக்கும்

இரவெல்லாம் புரண்டுபடுத்தபடியே

கிடப்பார்கள்



உறக்கம் அவர்களிடம்

தோற்று போயிருக்கும்

அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல



உயத்திய கரங்கள்

அழுத்தமாக ஒலிக்கும் குரல்கள்

சங்கிலி தொடராய்

இணைந்த கைகள்

அடக்கு முறையை

எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள்.