திங்கள், 25 மே, 2009


வெடிக்கிறது
அழுகை
இயலாமையின் எல்லாவகை
வெளிப்படுதல்களுடனும்

கனவின் கூர்மை கருகி
தீயுமிழ்ந்த கணத்தில்
வற்றிப்போன ஆறாய்
வெறுமையுற்று நிற்க்கிறோம்

புகைந்து கிளம்பிய
துயர நெடி பரவும்
காற்றின் அடுக்குகளில்
புதைந்து , இருக்கும்
உயிர்களின் இருப்பில்
வாழ்கின்றன பதுங்கு குழிகள்

ஆயுதங்கள்
ஏதுமற்ற குழந்தைகளின்
ஒலங்களில் கருகும் பூக்களில்
வாசனை என்றேதும் புலப்படாது

சிதறடிக்கப்பட்ட
தசைத்துணுக்குகள் நிறைந்த
நிலமெங்கும்
வெயிலில் வீசப்பட்ட மீனாய்
முடிவுறாத் துயரத்தின் பெருங்கற்கள்
உருள உருள கிடக்கிறது வாழ்க்கை

குண்டுகள் சிதைந்த
பென்சில்களையும் ஓவியங்களையும்

தீ தின்ற பின்
காலத்தின் வெம்மை தகிக்கும் கைகளில்
வரைய காத்திருக்கிறன அவர்கள்
விடுதலையை.


- யாழன் ஆதி