வெள்ளி, 8 மே, 2009

உறவுகள் - ருத்ரன்






















உறவுகள் சௌகரியமான பொய்கள். அவசியமான உண்மைகள். உதவும் பொய்களுக்கும் தேவையான உண்மைகளுக்கும் இடையேதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ உறவுகள் தேவை.


உறவு என்பது இன்னொரு நபருடன் மட்டுமல்ல - இன்னொரு பொருளுடன் , உயிருடன் என்று எப்படியாவது இணைத்துக் கொள்ளும் ஒரு மனப்பான்மை.


இளைப்பாறிவிட்டு ? அந்த நிழலே போதும் என்றால் அதிலேயே தங்கிவிடலாம். அது தற்காலிகத் தேவைதான் என்று தெரிந்தால் வாழ்வின் பாதையை தொடரலாம் உண்மைகளைத்தான் தொடர வேண்டும் என்றில்லை : பொய்களையும் தொடரலாம். உண்மை நிஜத்தின் தரை , நடக்கத்தான் முடியும். ஆனால் பொய் ஒரு கனவின் விஸ்தாரம் - பறக்கவும் முடியுமெனும் ஆசையை நம்பிக்கையாக்கும் அரிதாரத்தின் ஆதாரம். பறப்பதற்கு சிறகுகள் அவசியம். நம் சிறகுகள் இந்த சமுதாய கூண்டில் வாழ்வதற்காக வெட்டப்பட்டவை. வெட்டிவிட்ட பச்சைக்கிளி , "ஜோசியம் சொல்லி" தீனி பெறுவதை போலத்தான் வாழ்கிறோம். கூண்டுகள் நமக்கு சிறையாக தோன்றுவதில்லை , பாதுகாப்பாக தெரிகின்றன. சின்ன சின்ன சந்தோஷங்களே போதும் என்ற கூண்டு கிளி மனப்பான்மையே நம் சமுக இயக்கத்தை நிர்ணயிக்கிறது. சமூகத்திடம் பெரும் சிறு தீனியே மனப்பசியை தீர்ப்பதால் , நம் வாழ்க்கை நிரந்தர நிம்மதியும் உற்சாகமும் தரும் தரிசனத்தை நோக்கிய தவமாக மாறுவதில்லை.