திங்கள், 25 மே, 2009


பாலஸ்தீனப் போராளிகள் பற்றி


நான் பேசலாம்


அயர்லாந்து சுதந்திர போராட்டம் பற்றி


நான் எழுதலாம்


தியான்மென் சதுக்க கொலைகளுக்கும்


நான் குரல் கொடுக்கலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



இராக் பற்றி


நான் கவலைப்படலாம்


திபெத்தியர்களுக்காக


நான் கண்ணீர் விடலாம்


பர்மியப் பெண்ணுக்கும்


நான் பரிந்து பேசலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



சேகுவராவை


நான் கொண்டாடலாம்


ஃபிடல் காஸ்ட்ரோவை


நான் வணங்கலாம்


கொசோவா விடுதலையை


நான் ஆதரிக்கலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



உலகின் எந்த மூலையில்


இனப்படுகொலை நடந்தாலும்


நான் மனிதாபிமானி ஆகலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



எங்கு உள்ளது எனத்தெரியாத


நாட்டைப் பற்றி


நான் பேசலாம்


நான் எழுதலாம்


நான் குரல் கொடுக்கலாம்


நான் வருத்தப்படலாம்



யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை



ஆனால்


என் கண்ணுக்கெட்டும் தூரத்தில்


கண்ணீர்த் துளியாய்


கடலுக்குள் கிடக்கும்


நாடு பற்றி மட்டும்



நான்


எதுவும் பேசக்கூடாது


எதுவும் எழுதக்கூடாது


எதுவும் சொல்லக்கூடாது


எதற்க்கும் குரல் எழுப்பக்கூடாது



ஏனென்றால்


நான் ஒரு தமிழன்



- பவுத்த அய்யனார்