
அவள்
உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்
நீங்கள் பிரியத்தின் வெவ்வேறு வடிவங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.
அவள்
தன் துக்கங்களை பகிர்ந்து
புதிர்களுக்கான முடிச்சுகளை காட்டுகிறாள்
நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்
அவளை அவளாகவே.
நாட்கள் கழிய
உங்களை பிடிக்கும் என்கிறாள்
சொற்களை உங்களோடு புதைத்து
கொஞ்சமாகச் சிரிக்கிறீர்கள்.
நேற்றுமில்லாத இன்றுமில்லாத
தருணத்தில்
உங்களின் அழகின்மையை பட்டியலிட்டு
நீங்கள்
கட்டியிருந்த
ஆளுமையை சிதைக்கிறாள்
உங்களின் துக்கத்தை அறிந்தவளாய்.
தான்
சொன்னவை எதுவும் பொருளற்றவை
தன்
சிக்கல்களின் வெற்று பிம்பங்கள் என்கிறாள்.
நீங்கள்
நிராகரிக்க எதுவுமில்லை
உண்மையின் வெம்மையில் கசங்கத் துவங்குகிறீர்கள்
இந்தத் தார்ச்சாலையின் மதிய வெயிலில்
வாகனத்தில் நசுங்குவது கூட
உங்களுக்கு
ஆசுவாசம் தரக்கூடும்.
கண்ணீரில் கரையத் துவங்கும்
உங்களைப் பார்த்து செருப்புத் தைப்பவன்
வருத்தப்பட்டிருக்கலாம்.
உங்களுக்கு அடுத்தவரின் கருணை தேவையில்லை
உங்களின் துக்கம் உங்களுக்கானது
இந்தக் கண்ணீருக்கான அர்த்தம் முடிவற்றது
உறங்கச் செல்கிறீர்கள்
இரவின் வெறுமை உங்களை விழிக்கச் செய்கிறது.
அருகில் கிடக்கிறது ஒரு நைலான் கயிறு.